Friday 16 November 2012

தசாவதாரம்: Kamal Haasan & his "Naked" Lies!!


தசாவதாரம் பத்திப் பல பேரு பல விதமா பலப்பல பதிவு போட்டிருக்காங்க! அதுலயும் இந்தக் "கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது" பாட்டு பிச்சிக்கிட்டுப் போகுது! ச்சே இந்த மீஜிக் ஆல்பம் வெளியிடற நேரம் பார்த்து நான் சென்னையில் இல்லாமப் போயிட்டேன்! இருந்திருந்தா இந்தப் பாட்டில் சொல்லி இருக்குற பல பொய்களுக்கு ஜாக்கிசானோடவும் கமலோடவும் சும்மாப் பறந்து பறந்து சண்டை போட்டிருப்பேன்! :-)

Naked Truth தெரியும்ங்க! அதென்ன Naked Lie? - ஹிஹி! எல்லாம் கமலுக்குப் புடிச்சமான இஷ்டைல் தாங்க!
நண்பர், பதிவர் அனந்த லோகநாதன், இந்தப் படத்தில் வரும் பெருமாளின் பக்திப் பாடல்களைக் கேட்கும் போது அடியேனை நினைத்துக் கொண்டாராம்! Haunting Effect-ஆ? மின்னஞ்சல் அனுப்பி இருந்தாரு! எல்லாம் மாதவிப் பந்தல் மயக்கம்! மாதவி இப்பிடி எல்லாம் கூட மயக்கி வச்சிருக்காளா? :-))

விசயத்துக்கு வருவோம்! பாடலின் வரிகள் அனைத்தும் அருமை! நடு நடுவில் பல்லாண்டு பாசுரம் எல்லாம் ஹை பிட்ச்சில் போட்டுக் கலக்கித் தான் இருக்கீங்க!
திருவரங்கத்துக் கவிஞராம்-ல வாலி?
//இராஜலஷ்மி நாயகன் ஸ்ரீனிவாசன் தான்
ஸ்ரீனிவாசன் சேய் இந்த விஷ்ணுதாசன் தான்
//
அப்படியே கமலோட அம்மா அப்பா பேரையும் பாட்டுல கொண்டு வந்துட்டாரு பாருங்க! சும்மா கேட்டுக் கிட்டே படிங்க மக்கா!

ஆனா அதுக்கப்பறம் தான் கலந்துகட்டி ஒரே பொய்யா வெளயாடி இருக்காருப்பா வாலி! பாட்டை மேலோட்டமா பார்க்கும் போது அத்தனையும் தத்துவ வரிகள் தான்!
கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது; கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது = இது ஓக்கே!
சைவம் என்று பார்த்தால் தெய்வம் தெரியாது; தெய்வம் என்று பார்த்தால் சமயம் கிடையாது = இங்கிட்டு தான் லேசா இடிக்குது!

ஏன்?.......வைணவம் என்று பார்த்தால் மட்டும் தெய்வம் தெரியாது; தெய்வம் என்று பார்த்தால் சமயம் கிடையாது-ன்னு கூட மாற்றிப் பாடலாமே?

ஆனால் படத்தோட காட்சிக்கு ஏற்றாற் போலத் தான் பாட்டு எழுத முடியும் இல்லையா? படத்துல ஒரு சைவ அரசனும் (குலோத்துங்கன்), பல சைவர்களும் சேர்ந்து, தில்லை வைணவன் ஒருவனுக்குத் (ரங்கராஜ நம்பி) தண்டனையை நிறைவேற்றுவது போல் காட்சி! அதுனால காட்சிக்கு ஏத்தா மாதிரி வாலி எழுதிட்டாரு-னனு சொல்லி எஸ்கேப் ஆயிறலாம்! ஆனால் நம்ம கமல் எஸ்கேப்பு ஆக முடியுமா?



அது என்ன காட்சி-ன்னு பார்த்தா, பத்மஸ்ரீ கமலஹாசன், சொல்லியுள்ள-செய்துள்ள பொய்கள் அப்பட்டமாகத் தெரிய வரும்!
கவிதைக்குப் பொய் அழகு! - ஆனால் வரலாற்றைத் தொடர்பு படுத்திக் காட்டும் ஒரு திரைக் கதைக்குப் பொய் அழகல்ல!
வைணவ இலக்கியங்களை ஓரளவு அறிந்தவன் என்கிற முறையில், உங்களுடன் இந்தப் பின்னணியைப் பகிர்ந்து கொள்கிறேன்! மாற்றுக் கருத்துக்கள், தரவுகள் (ஆதாரங்கள்) இருந்தால் தட்டாமல் சொல்லவும்!


மொதல்ல கமலின் படக் காட்சியைப் பார்ப்போம்: (இன்னும் படம் வெளி வராததால், ஊடகங்களில் கிடைக்கும் கதையின் கருவை அடிப்படையாகக் கொண்டும், படத்தின் கலைஞர்கள் கொடுக்கும் நேர்காணலைக் கொண்டும் தான் எழுதுகிறேன். படத்தின் ஆர்ட் டைரக்டர் கூட, ரங்கராஜ நம்பி என்ற பாத்திரம் உண்மையானது என்று தான் பேட்டியில் குறிப்பிடுகிறார்! கேளுங்க :-)



***கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது - ஹரிஹரனின் கணீர்க் குரலில் ஆரம்பிக்கிறது தெறித்து விழும் வாலியின் தத்துவார்த்தமான வரிகள்.
இசை: மும்பையிலிருந்து தமிழுக்கு இறக்குமதியாகியிருக்கும் ஹிமேஷ் ரேஷ்மையா.
இந்தப் பாடல் காட்சியை படு பிரமாண்டமாக அமைத்திருகிறார்கள்.

பன்னிரண்டாம் நூற்றாண்டில் சைவர்களுக்கும், வைணவர்களுக்கும் இடையிலான பரஸ்பர பகையின் பின்னணியில் இந்தக் காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுவும் தில்லை கோவிந்தராஜப் பெருமாளை நடராசர் ஆலயத்தில் இருந்து பெயர்த்து எடுத்து கடலில் வீசி எறியும் காட்சி!

ஆஜானுபாகுவாக பஞ்சகச்சத்துடன் சட்டை போடாமல் திருநாமத்துடன் நிற்கும் கமலைக் (ரங்கராஜ நம்பி) கொக்கியால் இரண்டு கைகளிலும் கால்களிலும் குத்தி, ஒரு கிரேனில் கொடூரமாகத் தொங்கவிடுகிறார்கள் சைவர்கள்.
அம்பாரி வைத்து ஜோடிக்கப்பட்ட யானையின் மீது கம்பீரமாக வரும் சைவ மன்னரான நெப்போலியனின் உத்தரவின் பேரில்தான் இந்தக் கொடூரம் நடக்கிறது.

ஒரு பக்கம் ஏராளமான வைணவர்கள் செய்வதறியாமல் திகைக்க, இன்னொருபுறம் கமலின் மனைவியான அஸின் (அட! புடவை கட்டி ரவிக்கை போடாத அஸின்!!!!!) கதற...
கிரேன் வேகமாக கடற்கரையில் நகர்கிறது. உயரத்தில் தொங்கும் கமல் மீது அம்புகள் வேறு சரமாரியாக விடப்படுகின்றன. சற்று நேரத்தில் ஒரு சிலையோடு சேர்த்துக் கட்டப்பட்டிருக்கும் கமல் நடுக்கடலில் தூக்கி வீசப்படுகிறார்.

உடம்பை உலுக்கும் காட்சி! பாட்டு முடிகிறது. யாரையும் வெலவெலக்க வைக்கும் இந்த நான்கு நிமிட காட்சியைப் பீதியுடன் காணும் திரளான மக்களை உற்று கவனித்தால்,
சுத்தமாக அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு நடுத்தர வயதில் ஒரு மாநிற மனிதர் அட...அவரும் கமல்! காட்சிக்கு ஏற்றவாறு தசைகளை முறுக்கேற்றும்படி பாடியிருக்கிறார் ஹரிஹரன்! (*** வரிகளுக்கு நன்றி: tamilnadutalk.com)

ஆகக் கூடி...இது போன்ற ஒரு காட்சிக்கு வலு சேர்க்கும் பாடல் தான் அது! அதான் வீர வரிகள்!
வீரசைவர்கள் முன்னால் எங்கள் வீர வைணவம் தோற்காது!
மன்னன் சொல்லுக்கு அஞ்சி என்றும் மேற்கே சூரியன் உதிக்காது!


இப்போ உண்மையான கதை என்னன்னும் கொஞ்சம் பார்ப்போம், வாங்க!
இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்துல, அவனை மூளைச் சலவை செய்து சில சைவர்கள் போட்ட ஆட்டம்! அதுல பாவம், அப்பாவி சைவ-வைணவர்களிடையே சமயப் பூசலாய் போய் விட்டது!

தில்லையில் நடராசர் ஆலயத்துக்கு உள்ளேயே திருச்சித்ரகூடம் என்னும் கோவிந்தராசப் பெருமாள் கோயிலும் இருக்கு! அங்கு பெருமாள், ஈசனின் நடனத்தைப் பார்த்துக் களிக்கும் கோலத்தில் இருக்காரு! அவர் மீது திருமங்கை ஆழ்வார் 32 பாசுரம் பாடியுள்ளார். அதுவும் சிவபெருமானுக்குப் பிடிச்சமான சங்கராபரண ராகத்தைப், பெருமாள் மீது பாடி, சமய ஒற்றுமையை வளர்த்து இருக்காங்க!

ஆனால் மூளை கெட்டுப் போயி, சோழன் கோவிந்தராசர் சிலையை வேரோடு பிடுங்கி, தில்லைக்குப் பக்கத்தில் உள்ள பிச்சாவரம் கடற்கரையில் மூழ்கடிக்க வைத்தான். இதை ஒட்டக்கூத்தரும் அவர் பாட்டுல சொல்லி இருக்காரு! அதனால் கோயிலைச் சுற்றி இருந்த வைணவக் குடும்பங்களுக்குப் பல தொல்லைகள்! பல சங்கடங்கள்!
- இது வரைக்கும் சரி!
ஆனா ரங்கராஜ நம்பி என்ற ஒருவரைக் (கமலஹாசன்) கொக்கி மாட்டி, அம்பு எய்து, சிலையோடு கட்டி, கடல்-ல தூக்கிப் போடுறது எல்லாம் கொஞ்சம் ஓவர் கற்பனை தான்!

ஏதோ Passion of the Christ போல படம் பண்ணனும் நெனச்சா அதுக்கேத்த மாதிரி ஒரு கதையைத் தேர்ந்தெடுக்கணும்! அதை வுட்டுப்போட்டு இப்படி எல்லாம் டகால்டி பண்ணக் கூடாது!

சொல்லப் போனா கடலில் கட்டித் தூக்கிப் போடுவது ஒரு சைவருக்கு நடந்த கொடுமை! பழுத்த சிவனடியார் அப்பர் சுவாமிகளைச் சமண அரசன் தூணில் கட்டிக் கடலில் தூக்கிப் போடுவான்! ஆனால் அவரு தப்பிச்சி வருவாரு!
கல்தூணைப் பூட்டிஓர் கடலிடைப் பாய்ச்சினும்
நல்துணை ஆவது நமச் சிவாயவே
- என்பது நாவுக்கரசர் தேவாரம்!
இப்படி அப்பர் சுவாமிகளுக்கு முன்னெப்போதோ நடந்ததை, நைசா ஒரு வைணவருக்கு ரீமிக்ஸ் பண்ணிக் காட்டுறது எல்லாம் ஓவரோ ஓவர் கமல் சார்!

கடலில் போட்ட கோவிந்தராசர் மூலவர் சிலை மூழ்கிப் போனது! ஆனால் உற்சவரின் சிலையை மட்டும் எப்படியோ காப்பாற்றிய வைணவக் குடும்பங்கள், அந்தச் சிலையை இராமானுசரிடம் சேர்பிக்கிறார்கள். சிலையை வைத்துக் கொண்டு என்ன செய்வது? அதே இடத்தில் வைத்தால் மீண்டும் பிரச்சனை தான்!

பிரச்சனை சிலைக்கா? இல்லையே!...அதைச் சுற்றியுள்ள அப்பாவி மக்களுக்குத் தானே! இதை நன்கு உணர்ந்த "உண்மையான" சமயத் துறவி அவர்! ஈகோ பார்க்காமல் சிலையைக் கொண்டு போய், கீழ்த் திருப்பதியில் நிறுவுகிறார்! அங்கு புதிதாகக் கோவிந்தராசப் பெருமாள் ஆலயம் ஒன்றை எழுப்புகிறார்! இன்றளவும் கீழ்த் திருப்பதியில் இருப்பது தில்லை கோவிந்தராசரின் உற்சவரே!

ஆண்டுகள் உருண்டோட சோழன் மறைகிறான்! நல்லிணக்கம் நிலவும் போது, புதிதாக மூலவர்-உற்சவர் சிலைகளைச் செய்து மீண்டும் தில்லையில் இருந்த இடத்திலேயே,(சில தீட்சிதர்கள் எதிர்ப்பையும் மீறி) நிறுவுகிறார்கள்! இன்றும் தில்லை நடராசப் பெருமான் ஆலயத்துக்குள் கோவிந்தராசரும் பள்ளி கொண்டுள்ளார்! - கதை இம்புட்டு தான்!

நானும் பல நம்பிகளைப் பற்றிப் படிச்சிருக்கேன் கமல் சார்!
குருகூர் நம்பி, வடுக நம்பி, பெரிய நம்பி, திருக்கோட்டியூர் நம்பி, திருமலை நம்பி, உத்தம நம்பி, திருக்குறுங்குடி நம்பி-ன்னு இந்த நம்பி லிஸ்ட் நீளம் தானுங்கோ!
ஆனா நீங்க சொல்லுற ரங்கராஜ நம்பி எங்கேயும் வரலீங்கோ! சாமி படத்துல கோயில் பட்டாச்சாரியாரா வர்ற விவேக் டயலாக் ஞாபகம் வச்சிக்கோங்கோ :-)

(இரண்டாம் குலோத்துங்கன் தில்லையில் செய்தது இவ்வளவு தான்! சோழன் கொடுமைகள் எல்லாம் திருவரங்கத்தில் தான்! இராமானுசரை கர்நாடக மாநிலம் மேலக்கோட்டைக்கு ஓட ஓட விரட்டியது, அவருடைய வயதான குரு பெரிய நம்பிகள், மற்றும் இளையவரான சீடர் கூரத்தாழ்வான் - இருவரின் கண்களைப் பிடுங்கிய பயங்கரம், பின்னர் சோழனே கிருமி நோய் கண்டு "கிருமி கண்ட சோழனாய்" செத்தது எல்லாம் தனிக்கதை! அதற்கும் தசாவதாரம் கதைக்கும் தொடர்பில்லை!)


போதாக்குறைக்கு பொன்னுசாமின்னு, கடைசீல பார்த்தா இந்தப் பாட்டு விக்ரம் நடிச்ச மலையாளப் படத்தின் சினிமா-காரம்-காப்பியாம்! அட தேவுடா! இந்தாப் பாருங்க :-)


பத்மஸ்ரீ, உலக நாயகன், கமலஹாசன் அவர்களே!
கலைக்கு அழகு கற்பனை தான்! இல்லை-ன்னு சொல்லலை! பொன்னியின் செல்வன் நாவலில் கூட சுவைக்காகச் சில கற்பனைகளைச் செய்வார் கல்கி! ஆனால் கதையின் போக்கு வரலாற்றின் போக்கோடு முட்டிக் கொள்ளாது செய்வார். அதை முன்னுரையில் சொல்லியும் விடுவார்!

இன்றைய காலகட்டத்தில் சைவ வைணவச் சண்டைகள் எல்லாம் ஒன்னும் கிடையாது! இது போன்ற ஒரு சூழலில், நடக்காத ஒன்றை நடந்ததாகக் காட்டுவது என்பது சரியே அல்ல!
சும்மா கதை தானே என்று சொல்லாதீர்கள்! தில்லைக் கோவிந்தராசர் சிலையைக் கடலில் மூழ்கடித்தது உண்மை தானே! அதையும் தானே படத்தில் காட்டி உள்ளீர்கள்!
அதனுடன் ஆளையும் சேர்த்து படுபயங்கரமாகக் கொன்றார்கள் என்று பொய்யை உண்மையுடன் கலக்குவது எல்லாம் வரலாற்றைச் சிதைப்பதாகும்!
அதுவும் சினிமா போன்ற சக்தி வாய்ந்த ஊடகத்தில் சொல்லப்படும் காட்சிகளுக்கு, வரலாற்றுப் புத்தகத்தில் படித்துத் தெரிந்து கொள்வதை விட எஃபெக்ட்டு ஜாஸ்தி!
வேண்டாம் இந்த விபரீதப் போக்கு!
நீங்க தான் உங்களை ஒரு பகுத்தறியும் Agnostic என்று பேட்டிகளில் சொல்லிக் கொள்வீர்களே! அப்புறம் உள்ளூர மட்டும் ஏன் இந்த பொய்யான வைணவ பாசம்?

அப்படி மெய்யாலுமே நீங்கள் தொண்டு செய்ய ஆசைப்பட்டால் அதுக்கு உண்மையான பல நல்ல சம்பவங்கள் நடந்திருக்கு! மனித நேயத் தொண்டுகள் இருக்கு! உயிரையும் பொருட்படுத்தாது, தமிழை ஆலயத்துக்குள் முன்னிறுத்திக் காட்டிய வைணவக் கதைகள் இருக்கு!
தந்தை பெரியாருக்கு எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னரே, ஸோ கால்டு கீழ்க்குலத்தாரை, ஆலயத்துக்குள் அழைத்துச் சென்ற கதை இருக்கு! அதை எடுங்க!

அதை விடுத்து இப்படி எல்லாம் பொய் சொல்லிச் சைக்கிள் கேப்பில் வைணவம் வளர வேண்டிய அவசியம் இல்லவே இல்லை! :-)

படம் பிரம்மாண்டமா வருது-ன்னு நினைக்கிறேன்! பாடல் காட்சிகள், கதைக் களம் எல்லாரும் ஆகா ஓகோ என்று பேசுகிறார்கள்! உங்கள் காசெட் வெளியீட்டு விழாவில் முதல்வர் கலைஞர், உடையவர் இராமானுசரின் கொள்கைகளைப் புகழ்ந்து பேசுகிறார்!
இப்படி எல்லாமே நல்லா இருக்கும் போது, இந்த வரலாறு திரித்தல் என்னும் திருஷ்டி மட்டும் தேவையா?

படத்தின் துவக்கத்தில் அந்த ரங்கராஜ நம்பி பாத்திரப் படைப்பு கற்பனையே என்று போட்டு விடுங்கள்!
இல்லை...இல்லை ரங்கராஜ நம்பி என்பவர் உண்மை தான்; சைவர்கள் அவரைக் கொடுமைப் படுத்திக் கடலில் சாய்த்தார்கள் என்று நீங்கள் கருதினால், அதற்கான ஆதாரங்களைத் தமிழ் மக்கள் முன் வைக்க நீங்கள் கடமைப்பட்டு உள்ளீர்கள்!

மற்றபடி உங்க பிரம்மாண்டமான படத்தின் வெற்றிக்கு வாழ்த்துக்கள்!
(Pic Courtesy: http://dasavatharamthefilm.blogspot.com/)

No comments:

Post a Comment