Tuesday, 21 August 2012

வடகிழக்கு – வதந்தி – தொழில் நுட்பம் – அரசு?


மும்பை, பூனா, ஹைதராபாத், பெங்களூர், சென்னை என தென்னிந்தியாவின் மெட்ரோ நகரங்கள் அனைத்திலிருந்தும் வடகிழக்கு மக்கள் ஆயிரக்கணக்கில் தாயகத்திற்கு திரும்புகிறார்கள்.



செய்தி-01

வடகிழக்கு-மக்கள்
படம் நன்றி www.thehindu.com
மும்பை, பூனா, ஹைதராபாத், பெங்களூர், சென்னை என தென்னிந்தியாவின் மெட்ரோ நகரங்கள் அனைத்திலிருந்தும் வடகிழக்கு மக்கள் ஆயிரக்கணக்கில் தாயகத்திற்கு திரும்புகிறார்கள். அசாமில் போடோ இன மக்களுக்கும், இசுலாமிய மக்களுக்கும் இடையே நடைபெற்ற கலவரம் இதன் துவக்கப் புள்ளி என்றாலும் தற்போதைய கோலத்திற்கும் அலங்கோலத்திற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. அந்தக் கலவரம் குறித்து வினவில் தனிச்சிறப்பான கட்டுரை வருமென்பதால் தற்போது நடைபெறும் இடப்பெயர்ச்சி குறித்து மட்டும் இங்கு பார்க்கலாம்.
வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக அசாமில் குடியேறியிருக்கும் இசுலாமிய மக்கள்தான் கலவரத்திற்கு காரணமென்றும், அந்தக் கலவரத்தை வைத்து ஏனைய இந்தியாவில் இருக்கும் இசுலாமிய தீவிரவாத அமைப்புகள் மற்றும் பாகிஸ்தான் உருவாக்கியிருக்கும் வடகிழக்கு மக்கள் குறித்த வெறுப்புணர்வே தென்னிந்தியாவில் நடைபெறும் இடப்பெயர்ச்சிக்கு அடிப்படை என்று பா.ஜ.க வழக்கம் போல இந்து பாசிசத்தை உமிழ்கிறது.
இதற்கு தோதாக மத்திய அரசும், மியன்மார் கலவரம், அசாம் கலவரம் இரண்டிலும் இசுலாமிய மக்கள் பாதிக்கப்பட்டதாக சம்பந்தமே இல்லாத புகைப்படங்களை பாகிஸ்தான் இணைய தளங்கள், சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பி ஒரு பயபீதியை உருவாக்கியிருப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறது. இசுலாமியர்களால் தாக்கப்படுவோம் என்று பீதியின் காரணமாகவே வடகிழக்கு மக்கள் சொந்த ஊர் திரும்புவதாக இதைப் புரிந்து கொள்ளலாம்.
ஆனால் உண்மை என்ன? இந்தியாவில் இசுலாமிய மக்கள் யாரையும் தாக்கும் நிலையில் நாடெங்கிலும் இல்லை. அவர்கள் பெரும்பான்மையாக இருக்கும் வெகு சில இடங்களில் மட்டும்தான் அது சாத்தியம். இந்தியா முழுக்க பெரும்பான்மையாக வாழ்வது ‘இந்துக்கள்’தான் என்பதால் இந்துத்தவத்தின் தாக்குதலிலும், கண்காணிப்பிலும்தான் முசுலீம்கள் வாழ வேண்டியிருக்கிறது என்பதை குஜராத், மும்பை மற்றும் வட மாநில கலவரங்கள் பல, வாழும் வரலாறாக யதார்த்தத்தை எடுத்துரைக்கின்றது. ஹைதராபாத்தில் ஒரு தன்னார்வ நிறுவனம் இந்தியா – பாக் நட்புறவிற்காக நடத்திய கூட்டம் ஒன்றை பாக் சுதந்திர தினத்தை கொண்டாடும் முசுலீம்கள் என்று விசுவ இந்து பரிஷத் பரப்பியிருக்கும் அவதூறு தற்போது அம்பலத்திற்கு வந்திருப்பது ஒரு சான்று.
செல்பேசி, இணையம் போன்ற தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிதான் பாகிஸ்தானின் வதந்தியை வடகிழக்கு மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறது என்று சிலர் கூறுகின்றனர். பாகிஸ்தான் இந்த சதியை செய்வதாகவே வைத்துக் கொள்வோம். ஆனால் அந்த வதந்தியை இந்த மக்கள் ஏன் நம்ப வேண்டும்? என்ன பிரச்சினை வந்தாலும் தாம் பணியாற்றும் இடங்களில் மத்திய, மாநில அரசுகள் தம்மைப் பாதுக்காக்கும் என்று அந்த மக்களுக்கு ஏன் தோன்றவில்லை? மந்திரிகள் பலர் ரயில் நிலையங்களுக்கு வந்து வாக்குறுதி கொடுத்தும் ஏன் பலனில்லை?
இது அந்த மக்களின் சொந்த மண் அனுபவத்திலேயே தெரிந்த ஒன்று. இராணுவ சட்டங்களைவைத்து வடகிழக்கு மாநிலங்களில் இந்திய அரசு நடத்தியிருக்கும் அட்டூழியங்களை அந்த மக்கள் அறிவார்கள். பிறந்த ஊரிலேயே இதுதான் கதியென்றால், பிழைக்க வந்த ஊரில் மட்டும் அந்த அரசு மாறிவிடாது என்று அவர்களுக்குத் தெரியும்.  அரசு மட்டுமல்ல, ஊடகங்கள், நீதிமன்றங்கள், போலீசு அனைத்தும் பாதுகாப்பானதில்லை என்பதை காஷ்மீர் முசுலீம்கள் முதல் இராமேஸ்வரம் மீனவர்கள் வரை நன்கு அறிவார்கள்.
ஆகவே இந்த வதந்திக்கு பாகிஸ்தானையும், இணைய தளங்களையும் மட்டும் குறை கூறுவதில் பலனில்லை. யார் நெருப்பு வைத்தார்கள் என்பது பிரச்சினை அல்ல, சிறு தீப்பொறி பட்டாலும் பற்றி எரியும் வண்ணம் சமூக நிலமை சருகுககளாக காய்ந்திருப்பதுதான் பிரச்சினை. அடுத்து இந்த தகவல் தொழில்நுட்ப புரட்சியின் தரத்தைப் பார்ப்போம்.
அசாமில் போடோ இன மக்களுக்கும், இசுலாமிய மக்களுக்கும் இடையே நடக்கின்ற பிரச்சினைக்காக சம்பந்தமே இல்லாத வேற்று இன மக்கள் ஏன் வெளியேற வேண்டும்? அசாம், மணிப்பூரி, போடோ, குக்கி, நாகா, மிசோரம், திரிபுரா மற்றும் பல்வேறு பழங்குடி இனமக்களைக் கொண்ட இந்த பிராந்தியம் இந்திய மக்களிடம் வெறுமனே வடகிழக்கு என்பதாகத்தான் ஊடகங்கள் மற்றும் இந்திய அரசால் இந்திய மக்களிடம் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கின்றது.
வரலாற்று ரீதியாக இந்தியாவுடன் வேறுபட்டு இருக்கும் இப்பிராந்திய மக்களை வன்முறையால் மட்டுமே கட்டி வைத்திருக்கிறது இந்திய அரசு. ஆக பெரிதாக பீற்றப்படும் தகவல் தொழில் நுட்ப புரட்சி ஒரு பிராந்திய இன மக்களை புரிந்து கொள்வதற்கு கூட பயன்படவில்லை. சினிமா நட்சந்திரங்கள் உண்டு கழித்திருக்கும் வரலாற்று முக்கியத்தவும் வாய்ந்த செய்திகளின் ஆக்கிரமிப்போடு ஒப்பிடும் போது வடகிழக்கிற்கான இட ஒதுக்கீடு மிகவும் சொற்பம்.
இந்தியா முழுவதும் தேவைப்படும் மலிவான உழைப்புச் சந்தையை வடகிழக்கு அளிக்கிறது என்பதைத் தாண்டி இம்மக்கள் குறித்து முதலாளிகளுக்கோ, இந்திய அரசுக்கோ அக்கறை ஏதுமில்லை.

No comments:

Post a Comment