Tuesday, 21 August 2012

தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமா?


தற்போது அரசியல் அரங்கில் ஒரு பரபரப்பான செய்தி என்னவென்றால், அது, தமிழகத்தில் கூடிய விரைவில் டாஸ்மாக் கடைகள் எல்லாம் மூடப்பட இருக்கின்றன என்பதுதான். இது வரும் பாராளுமன்ற தேர்தல் கணக்கு என்று அரசியல் ரீதியில் கருத்து கூறினாலும், மதுவிலக்கு என்பது நடைமுறையில் சாத்தியம்தானா? இதனால் ஏற்படும் நன்மை,தீமைகள் என்ன/
மதுவிலக்கு அமல்படுத்தினால், அரசுக்கு ஏற்படும் ஒரே பாதிப்பு வருமானம் ஒன்றுதான். ஆனால், நன்மைகள் பல.  இன்றைக்கு மது குடிப்பது என்பது ஒரு தீய பழக்கம் என்ற எண்ணமே மக்கள் மனதில் இல்லை. டிபன் சாப்பிடுவது, டீ,காபி குடிப்பது போல், மது அருந்துவது என்பது ஒரு அன்றாட தேவை என்பது போல் நிலைமை மாறிவிட்டது. முன்பெல்லாம் பிறந்தநாள்,  திருமணம், இறந்தவீடு என்று ஏதாவது ஒரு நன்மை அல்லது தீமை நிகழ்ச்சிகளுக்கு மட்டும் மது விருந்து வைப்பது என்பது ஒரு பழக்கமாக இருந்தது. ஆனால் இப்போது மது அருந்துவது என்பது ஒரு அன்றாட நிகழ்ச்சியாக மாறிவிட்டது. பள்ளி மாணவர்கள் முதல், ரிட்டையர்டு ஆசாமி வரை குடிப்பழக்கம் என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. இன்னும் ஒரு படி மேலே போனால், பெண்களும் அதுவும் இளம்பெண்களும் இந்த பழக்கத்திற்கு படிப்படியாக அடிமையாக வருகின்றனர். இந்த நிலைமை இப்படியே போனால், நமது கலாச்சாரம் என்பது கிலோ என்ன விலை என்ற நிலைமைக்கு வந்துவிடும்.
குடித்துவிட்டு கலாட்டா செய்தால் தண்டனை, குடித்துவிட்டு வண்டி ஓட்டினால் தண்டனை என்ற சட்டம் உண்மையில் நகைப்புக்குரிய ஒரு சட்டம். வண்டியில் டாஸ்மாக் கடைக்கு வரும் குடிகாரன், குடித்துவிட்டு, வண்டியை அங்கேயே விட்டுவிட்டு ஆட்டோவிலா செல்ல முடியும்,. தெருவிற்கு நான்கு மதுக்கடைகளை திறந்துவிட்டு, பின் குடிக்காதே என்று பாட்டிலின் மேல் லேபிள் மட்டும் ஒட்டுவதால், என்ன பயன் விளையும் என்று அரசு நினைக்கின்றது என்றே தெரியவில்லை. சினிமாவிலும், டிவி சீரியல்களிலும், மது குடிக்கின்ற காட்சிகள் வரும்பொழுது, மது தீமையானது என்ற விளம்பரம் வருகிறது.  என்ன ஒரு பைத்தியக்காரத்தனமான விளம்பரம். குடிகாரன் அந்த விளம்பரத்தை பார்த்து திருந்துவது என்பது நடக்கக்கூடிய காரியமா?  இன்றைக்கு நடக்கும் 90 சதவிகித விபத்துகளுக்கு குடித்துவிட்டு, வாகங்களை இயக்குவதாலே ஏற்படுகிறது.
ஒரு குற்றம் தடுக்கப்படவேண்டுமென்றால், அந்த குற்றத்தின் ஆணிவேர் களையப்படவேண்டும். மதுவை ஒழிக்க வேண்டுமென்றால், கண்டிப்பாக மதுக்கடைகளை மூடினால்தான் முடியும். கள்ளச்சாராயம் பெருகும் என்ற வீண்வாதம் தேவையில்லாதது. குடித்தே ஆகவேண்டும் என்பவன் கள்ளச்சாராயமோ அல்லது வெளிமாநிலத்திற்கோ சென்று குடிப்பான்,. நாம் அவர்களை விட்டுவிடுவோம். ஆனால் கடைகள் திறந்திருப்பதால்தான் குடிக்கிறேன் என்று சொல்பவர்கள் கண்டிப்பாக திருந்துவார்கள். மேலும் குடிப்பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு செலவிடப்படும் மருத்துவச்செலவுகள் பெருமளவு அரசுக்கு குறையும். கண்டிப்பாக ஏழை, எளியவர்கள் வீட்டில் மூன்று வேளைகளும் அடுப்பு எரியும்.
இலவச திட்டங்களை நிறுத்தினாலே மதுக்கடை மூடலால் ஏற்படும் இழப்பை பெருமளவு சரிகட்டலாம். மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில், மத்திய அரசுக்கே சவால் விடும் அளவிற்கு பொருளாதாரம் இருப்பதை இன்றைய தமிழக அரசு சிந்திக்கவேண்டும்.  மதுக்கடைகளை மூடினால், பொதுமக்கள் பலர் பயமின்றி வாழ்க்கையை ஓட்டலாம். பணமும் மக்கள் கையில் தாராளமாக புழங்கும். மதுவிற்கு செலவிடப்பட்ட பணம், வேறு சில நல்ல வழிகளில் செலவழிக்க வாய்ப்புள்ளது. இதனால் கண்டிப்பாக தமிழகத்தில் பொருளாதார புரட்சி ஏற்படும் என்பது நிச்சயமே. 
உலகில் மதுவிலக்கு பல நாடுகளில், குறிப்பாக இஸ்லாமிய நாடுகளில் அமலில் உள்ளது. ஆனால் மகாத்மா பிறந்த இந்தியாவில், அவரது தாய் மண்ணான குஜராத்தில் மட்டும் அமலில் உள்ளது. மதுவிலக்கை முதன்முதலில் மூதறிஞர் ராஜாஜி அமல்படுத்தியபோது, பொருளாதார வல்லுனர்கள், பெரும் நிதியிழப்பு ஏற்படும் என்று எச்சரித்தனர். ஆனால், ராஜாஜி அவர்களோ, சமூகச் சீர்கேட்டினைத் தடுத்து நிறுத்துவதற்காக ஒரு மாநிலத்தின் வருவாயைப் பாதித்தாலும் அதைச் சமாளிக்கப் புதிய யோசனைகளை நடைமுறைக்குக் கொண்டுவருவதுதான் சிறந்த நிர்வாகத் திறன் என்று கூறி மதுவிலக்கை தைரியமாக அமல்படுத்தினார். அந்த அளவிற்கு தைரியம் உள்ளவர் இப்போதைய முதல்வர் என்பதை  மதுவிலக்கை அமல் படுத்தி நிரூபிக்கவேண்டும்.  முதலில் சில சிறுசிறு இடர்பாடுகள் வரத்தான் செய்யும். ஆனால், நீண்டநாள் பயன்கருதி அவற்றையெல்லாம் அரசு சமாளிக்க வேண்டும். 
தற்கொலைக்கு முயல்வோரில் 37 சதவீதத்தினர் மதுப்பழக்கம் உள்ளவர்களே. மது போதையில் தவறுகள் செய்யத் துணிபவன், போதை குறைந்ததும் தான் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் கொலையும் செய்யத் துணிகிறான். மது தீமை தரும் என எழுதி மட்டும் வைப்பதால் பயனில்லை. வீட்டுக்கும், நாட்டுக்கும், உயிருக்கும் மது கேடு என்றால், அதற்குத் தடை விதிப்பதுதானே சரியாகும். அதை விட்டு எச்சரிக்கை செய்வது மட்டுமே எங்களது கடமை எனக் கூறுவதற்கு ஓர் அரசு தேவையில்லையே.. 
ஒரு ஆட்சியின் வரலாறு எழுதப்படும்போது, அந்த ஆட்சி எத்தனை ஆண்டுகள் பதவியில் இருந்தது என்பதை விட, பதவிகாலத்தில் அந்த அரசு மக்களுக்கு என்ன செய்தது என்பதை வைத்தே அந்த ஆட்சியின் முக்கியத்துவம் தெரியும். எனவே தமிழகத்தின் எதிர்கால, வளமான, திறமையான சமுதாயதிற்கு மதுவிலக்கு என்பது இன்றியமையாதது. நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பது நல்லவையாக இருக்க மதுவை ஒழிப்போம், மறுமலர்ச்சியை வரவேற்போம்.

No comments:

Post a Comment