Tuesday, 21 August 2012

தங்கத்தை சேமிப்பது எப்படி?



மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும், தன் எதிர்கால வாழ்க்கைக்காக நமது வருமானத்தில் சிறிதளாவது சேமித்தே தீர வேண்டும். அதை எவ்வாறு சேமிப்பது, என்பதில் பல முரண்பாடுகள்.
 
முன்பெல்லாம் சேமிப்பது என்றால், தபால் அலுவலகத்திலேயோ அல்லது வங்கியில் சேமிப்பு கணக்கு திறப்பதிலேதான் இருந்தது. பின்னர் மாத சீட்டுகளும், தனியார் பைனான்சுகளும் சிறிது காலம் ஆக்கிரமிப்பு செய்தது.  வங்கியில் அல்லது தபால் நிலையத்தில் சேமிக்கும் பணத்திற்கு ஆபத்தில்லை என்றாலும் அதில் கிடைக்கும் வட்டி மிகவும் சொற்பமானது, அது போல சீட்டு மற்றும் தனியார் பைனாஸ்கள் முதலுக்கே மோசமாகக் கூடிய அபாய சேமிப்பு. பின்னர் எதில்தான் பாதுகாப்பாகவும், நல்ல வருவாய் கிடைக்கும்படியாகவும் சேமிப்பது. அதற்கு ஒரே வழி தங்கம் அல்லது வெள்ளியில் முதலீடு செய்வதுதான்.

தங்கத்தை சேமிப்பது பலவகையாக இருக்கின்றது. நகைகளாக வாங்கி சேமிப்பது, வங்கியில் அல்லது தபால் நிலையத்தில் தங்கக்காசுகளாக வாங்குவது என பல வகைப்படும். ஆனால் அதிலும் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன. தங்கத்தை நகைகளாக வாங்கினால் கடைக்காரர்கள் செய்கூலி,சேதாரம்,வரி என பல்வகை காரணங்களை கூறி நம்மிடம் பணத்தை கறந்துவிடுவார்கள். அதுபோல அந்த நகைகளை விற்கச்செல்லும்போதும் சேதாரத்தை கழித்துதான் நமக்கு பணம் கொடுப்பார்கள். மேலும் சந்தை விலைக்கு விற்க முடியாது. பழைய நகைக்கு என ஒரு விலை வைத்திருப்பார்கள். அந்த விலையைத்தான் நமக்கு கொடுப்பார்கள். மேலும் நகைகளை வாங்கினால் மட்டும் போதாது, அவற்றை பாதுகாப்பது அதைவிட பெரிய கஷ்டமான காரியம். வீட்டில் என்னதான் பீரோவில் பூட்டி வைத்தாலும், திருடன் சர்வசாதாரணமாக புகுந்து, நகைகளை கொள்ளையடித்துவிட்டு, வீட்டில் உள்ள சாப்பாட்டையும் சாப்பிட்டுவிட்டு, ஆற அமர செல்வதை பத்திரிகைகளில் படிக்கின்றோம்.
 
வங்கிகளில் அல்லது தபால் அலுவலகங்களில் தங்கக்காசுகள் வாங்கினால், அதன் விலை மிகவும் அதிகமானதாக இருக்கும். 24 காரட் தங்கம் மட்டுமே வாங்க முடியும். அதற்கு அவர்கள் விதிக்கும் வரியும் அதிகமாக இருக்கும். மேலும் அந்த தங்கக்காசுகளை ஒரு அவசரத்திற்கு எந்த வங்கியிலும் அடகு வைக்கமுடியாது. அவர்களே திரும்பவும் விலைக்கு வாங்கவும் மாட்டார்கள். 
 
இதற்கு சரியான வழி ஆன்லைனில் தங்கம் வாங்கி சேமிப்பதுதான். அதாவது தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால், உடனே ஒரு டிமேட் கணக்கு ஒன்றை தரகர் அல்லது தரகு நிறுவங்களில் ஒன்றில் திறக்கவேண்டும். அதற்கு வெறும் ரூ.500 மட்டுமே செலவாகும். சில நிறுவங்கள் அதிகமாக முதலீடு செய்தால்,  இலவசமாகவே கணக்கு திறந்து கொடுக்கின்றார்கள். அதன்பின் மிக மிக எளிதாக நம்முடைய சேமிப்பு கணக்கிலிருந்து பணத்தை டிமேட் கணக்கிற்கு மாற்றிக்கொண்டு நாமே தங்கத்தை குறைந்தது 1 கிராமில் இருந்து சந்தை விலைக்கே வாங்கி சேமித்துக் கொள்ளலாம். இதற்கு செய்கூலி,சேதாரம் மற்ற இதர செலவினங்கள் எதுவும் இல்லை. வரி, மற்றும் தரகுத்தொகை மட்டும் மிகச்சிறிய தொகைதான் பிடிப்பார்கள். 

 மேலும் நம்மிடம் எப்பொழுதெல்லாம் பணம் இருக்கின்றதோ, அப்பொழுது சிறிது சிறிதாக தங்கத்தை வாங்கி சேமித்துக் கொள்ளலாம். பின்னர் நமக்கு எப்பொழுது தேவையோ அப்பொழுது நமது கணக்கில் உள்ள தங்கத்தை ஆன்லைனிலேயே விற்று, பணத்தை உடனே நமது சேமிப்பு கணக்கிற்கு மாற்றிக்கொள்ளலாம். அல்லது நமது தங்கக்கட்டிகளாக வேண்டுமென்றாலும் இரண்டே நாட்களில் பெற்றுக் கொள்ளலாம்.  திருடர்கள் பயம் இன்றி நிம்மதியாக தங்கத்தை சேமிக்க இதுவே சிறந்த வழி.
திருமணம் போன்ற அத்தியாவசிய தேவைகள் இருந்தால் மட்டுமே தங்கத்தை நகைகளாக வாங்க வேண்டும். மற்ற நேரங்களில் தங்கத்தை ஆன்லைனில் வாங்கி சேமிப்பது ஒன்றே சிறந்த வழியாகும். வெள்ளியையும் இதே முறையில் வாங்கி சேமிக்கலாம். 

ஒரு குறிப்பிட்ட தொகையை நாம் முதலீடு செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால், அதில் பாதியை தங்கத்திலும், மீதியை வெள்ளியிலும் சேமிப்பது நலம் பயக்கும். தங்கத்தை விட வெள்ளி சில சமயம் மிகவும் அதிகமான லாபத்தை கொடுக்கும்.  மேலும் முதலீடு செய்தவர்கள் வாங்கிவிட்டு, பிறகு அப்படியே விட்டுவிடக்கூடாது. அடிக்கடி விலை ஏற்ற, இறக்கங்களைக் கண்காணிக்க வேண்டும். தங்கத்தின் விலை ஓரளவிற்கு நன்றாக ஏறிய பின் சில காரணங்களால் திடீரென விலை இறங்கத் துவங்கும். அந்த நிலையில் நம் கணக்கில் உள்ள தங்கத்தை விற்றுவிட்டு பணமாக மாற்றி கொண்டு, பின் 10 அல்லது 20 நாட்கள் பொறுத்திருந்து மீண்டும் விலை இறங்கிய பின் வாங்கிக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நாம் அதிகப்படியான லாபத்தை பெற முடியும். 

தங்கம், வெள்ளியை சேமித்து, தன்னிறைவு வாழ்க்கைக்கு வழிவகுப்போம்.

1 comment:

  1. தங்கத்தையும், பணத்தையும் சம்பாதிக்கவும், சேமிக்கவும் யாராலும் முடியாமல் இல்லை. ஆனால் பலருக்கும் அதற்கான வழிகள் தெரியவில்லை என்பது தான் உண்மை. பணத்தைப் பற்றிய கல்வி நமக்கு இல்லாததாலும், பணத்தைப் பொறுத்த நம் கண்ணோட்டம் தவறாக இருப்பதாலும் தான் பணம் என்பது இன்று நமக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. நம் முன்னோர்கள் அல்லது நமது குடும்பத்தில் உள்ளவர்கள் நமக்கு சொல்லிக்கொடுத்தவற்றை வைத்தே நாம் பணம் சம்பாதிப்பதைப்பற்றி யோசிக்கிறோம். ஆனால் காலம் காலமாக வேலை செய்வதற்கு சொல்லிக்கொடுத்த அளவிற்கு யாரும் நமக்கோ அல்லது நமது முன்னோர்களுக்கோ பணம் சம்பாதிப்பதைப்பற்றி சொல்லிக்கொடுக்கவில்லை என்பது தான் உண்மை. இன்று நம்மில் பலர் வறுமையில் இருப்பதற்குக் காரணம் பணம் பற்றிய அறிவு இல்லாததே ஆகும். பணக்காரர்கள் தங்கள் வாரிசுகளுக்கு மட்டுமே கற்றுத் தரக்கூடிய பணம் சேர்க்கும் வித்தைகளை ஒருசிலர் மட்டுமே உலகத்திற்கு எடுத்துக்கூறி உள்ளனர். அந்த இரகசியங்களை எங்கு, எப்படிப் பெறுவது என்பதை அறிய விரும்பினால் secretsinmoneymaking@yahoo.com என்ற முகவரிக்கு இ-மெயில் அனுப்பவும்.

    ReplyDelete