Sunday, 8 April 2012

பணம் - எனது பார்வையும், சில முரண்பாடுகளும்..!!!



நாம் பணத்தைத் தேடிச் செல்ல செல்ல அது நம்மை விட்டு விலகியே செல்கிறது.. பணத்தை உருவாக்கியது மனிதன்தான். ஆனால் இன்று பணமே மனிதனை மிகவும் ஆட்டுவிக்கிறது. பணத்திற்காக எவ்வளவு படிப்பு படித்த இளைஞர்களும், இளைஞிகளும், கைகட்டி தங்களது திறமைகளையும், உழைப்பையும் விற்றுக் கொண்டிருக்கின்றனர். மெத்த படித்த அறிவாளியும், பணத்தின் முன்பு பணிந்து விடுகிறான். M.A. B.E. Ph.D போன்ற பெரும்படிப்பு படித்தவர்களும், தங்களை சிறிய ஊதியத்திற்காக, வேலையின் பொருட்டு பண வசதி படைத்த செல்வந்தர்களிடம் பணிந்து வேலை செய்வதை பார்க்கிறோம்.

தங்களது அறிவைக்கூட பணத்திற்காக அடகு வைக்க வேண்டியதாக உள்ளது. பணம் கிடைக்குமென்றால் இன்று மனிதன் எந்தச் செயலையும் செய்யத் தயங்குவதில்லை. நமது உறவுகளின் ஆழத்தைக்கூட நிர்ணயிப்பது பொருளாதாரமே! பணம் படைத்தவனையே அவர்களது உறவினர்களும், நண்பர்களும் சுற்றி சுற்றி வருகின்றனர். பணம் இல்லாவிட்டால் யாரும் ஒருவனை சீண்டக்கூட மாட்டார்கள். எத்துணை திறமையிருந்தாலும் உலகம் அவனைக் கண்டு சிரிக்கும்! அவனை சமுதாயம் அலட்சியம் செய்துவிடும்.
"இல்லானை இல்லாளும் வேண்டாள்
ஈன்றெடுத்த தாயும் வேண்டாள்"

என்று மூதுரை பணத்தின் அருமையைப் பற்றி அழகாகக் கூறகிறது.
"பணம் பத்தும் செய்யும், பணம் பாதாளம் வரைக்கும் பாயும்" என்பதெல்லாம் பணத்தின் வலிமையை விளக்குவதற்காகச் சொல்லபட்டவையே..!!

எனவே நம் அன்றாட வாழ்க்கைக்கும், சமுதாயத்தில் நமக்கென ஒரு அங்கீகாரம் கிடைக்கவும் பணம் நிறையச் சம்பாதிக்க வேண்டும்.

நமது முயற்சிகளெல்லாம் முடிவில் பணம் சம்பாதிப்பதையே நோக்கிச் செல்கின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது.

இன்று அமெரிக்காவானது உலகிலேயே முதல்தர வல்லரசாகத்திகழ்வதற்குக் காரணம் என்ன? அதனுடைய செல்வப்பெருக்கம்தானே? கொஞ்ச காலம் முன்பு வரையிலும் ரஷ்யாவும், அமெரிக்கா போல் மிகவும் வலிமைபெற்று விளங்கியது! காரணம் தன்னிடம் பொருளாதார வலிமை இருப்பதாக இது காட்டிக்கொண்டதுதான்!

ஆனால் இன்று ரஷ்யா சிதறி உடைந்த பின்பு செல்வமும், வளர்ச்சியும் நின்றுவிட்டன. சாப்பாட்டிற்கே பஞ்சம் வந்துவிட்டது என்கிறார்கள்..!! அதனால் தான் இன்று ரஷ்யாவின் மதிப்பு உலக நாடுகளில் மிகவும் தாழ்ந்துவிட்டது. ஒரு குறிப்பிட்ட நாள்கள் வரை அமெரிக்காவே ரஷ்யாவைப் பார்த்து பயந்த நாட்கள் போய் இன்று, அமெரிக்காவின் உதவியை ரஷ்யா நாடுகிறது. காரணம் பொருளாதார சீர்குலைவு..

இதிலிருந்த நமக்கு ஒரு பாடம் , ஒரு அனுபவம் கிடைக்கிறது.. வாழ்க்கையில் பணம் இல்லையென்றால் ஒன்றும் செய்யமுடியாது.. வாழ்க்கை மிகவும் தாழ்ந்துவிடும்.. மேம்பாடு அடைய முடியாது என்பது ரஷ்யாவின் நிலையிலிருந்து நாம் அறிந்துகொள்ளலாம்.

அது சரி.. இந்தப் பதிவின் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள் என கேட்கறீர்களா? உங்கள் கேள்விக்கு பதில் பணம் தான் தற்போதைய சூழ்நிலையில் வாழ்க்கையில் பிரதானம்.. மேம்போக்கான வாழ்க்கைக்கு, மற்றவர்களின் பார்வைக்கு, பணம்தான் பிரதானம்.. அது தான் மற்றவர்களின் வெளிப்பார்வைக்கு தெரியும். என்பதுதான்.. மற்ற அகம் சார்ந்த விஷயங்கள் வேறு..!!!

No comments:

Post a Comment