கோவை:""வேலையின் போது ஏற்படும் விரக்தி, கோபம், மனஅழுத்தத்துக்கு யோகாவே மருந்து,'' என, தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலை துணைவேந்தர் வைத்தியநாதன் பேசினார்."இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் யோகா அண்ட் நேச்ரோபதி' சார்பில், யோகா சதுர் விழா கோவையில் நேற்று நடந்தது. சீனியர் வக்கீல் ஏ.பி.ஜெயச்சந்திரன் தலைமை வகித்து பேசுகையில் "யோகா பயிற்சி செய்வோருக்கு எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் சக்தி, மனநிலை எளிதில் ஏற்படும்' என்றார்.
யோகா இன்ஸ்டியூட் இயக்குனர் அறிவழகன் பேசுகையில், ""யோகா பயிற்சி, தமக்குள் இருக்கும் கடவுளை காண உதவுகிறது. இதற்கு பயம், கவலை, கோபம் என அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும்; அதுதான் யோகாவின் பயன். இதில், மூச்சுப்பயிற்சி மிகவும் இன்றியமையாதது. யோகா, தியானம் ஆகியவை மனஅழுத்தத்தை குறைக்கும்,'' என்றார்.தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலை துணைவேந்தர் வைத்தியநாதன் பேசியதாவது:யோகா பாடங்களை கற்கும் மாணவர்கள், ஆராய்ச்சியில் ஈடுபட்டு பிறருக்கு எடுத்துரைக்க வேண்டும். சித்தர்கள் யோகா, தியானம், மூச்சுப்பயிற்சி மூலம் தங்கள் உடலுக்கு தேவையான சக்தியையும், மன அமைதிக்கு தேவையான அனைத்தையும் பெற்றனர்.
யோகாவில் மூச்சுப்பயிற்சியில் ஈடுபடும் போது நுரையீரல் விரிவடைகிறது; இதன் மூலம் சுத்தமான காற்று அனைத்து உறுப்புகளுக்கும் சென்று தேவையை பூர்த்தி செய்கிறது; புத்துணர்ச்சியுடன் இருக்க உதவுகிறது. யோகாவில் முதலில் கற்றுத்தரப்படுவது தன்னொழுக்கம். இந்த தன்னொழுக்கம் இருந்தாலே போதும் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைத்துவிடும். உடல் நலனை பேணுவதுடன், பிறரிடம் பழகுவது எப்படி என்பதும் யோகாவில் கற்றுக்கொள்ளலாம். யோகா பயின்றவர்கள் தாங்கள் அடைந்த பயனை, பிறருக்கும் கற்றுத்தர வேண்டும். தற்போதுள்ள இயந்திரத்தனமான வாழ்க்கைமுறைக்கு யோகா, தியானம் மிக மிக அவசியம்.
பல்வேறு பணிகளால் ஏற்படும் விரக்தி, கோபம், மனஅழுத்தம் உள்ளிட்டவற்றை போக்க யோகா சிறந்த மருந்தாக இருக்கும்.ஒவ்வொரு குழந்தைக்கும் பிடித்த விஷயம் விளையாட்டு. நாம் சொல்லாமலேயே குழந்தைகள் விளையாடுகின்றனர். குழந்தைகளை விளையாட பெற்றோர் அனுமதிக்க வேண்டும்.
விளையாடும்போது அவர்களுக்கு சக்தி இழப்பு ஏற்படும்; அப்போது நாம் கொடுக்கும் உணவுகளை குழந்தைகள் ஆவலுடன் உட்கொள்வர். தினமும் குறைந்தது ஒரு மணி நேரமாவது குழந்தைகளை விளையாட அனுமதித்தால் போதும். அவர்களை நாம் நம் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடலாம். விளையாட வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ள குழந்தைகளின் ஆசையை கட்டுப்படுத்தி, கட்டாயப்படுத்தி சாப்பிட வைத்தாலோ, படிக்கச் சொன்னாலோ ஈடுபாடில்லாமல் "கடனுக்காகவே' செய்வர்; அவர்களின் கவனம் முழுவதும் விளையாட்டில்தான் இருக்கும்.
எனவே, குழந்தைகளை விளையாட்டில் ஈடுபடுத்தினால், நம் விருப்பப்படி நடந்து கொள்வர். குழந்தைகளை நம் கட்டுப்பாட்டில் கொண்டுவர விளையாட்டு முக்கிய கருவியாக செயல்படுகிறது.இவ்வாறு, துணைவேந்தர் வைத்தியநாதன் பேசினார். நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
நன்றி: தினமலர்
No comments:
Post a Comment