கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும் அலட்சியப்படுத்துங்கள்..!!! அதுவே வெற்றிக்கு வழி !!!
நண்பர்களே இன்று ஒரு தன்னம்பிக்கைக் கொடுக்கக்கூடிய வகையில் அமைந்திருக்கிற பதிவைக் காணப்போகிறோம்.
நம்முடைய வெற்றி - தோல்விகளுக்கு நாமே பொறுப்பாக வேண்டுமெயன்றி பிறரோ, சூழ்நிலையோ அல்ல. ஒரு சிலர் இப்படி கூறுவதுண்டு.
"எதிர்பாராத அதிர்ஷ்டம்" மூலம் ஒருவர் தீடீரென வளர்ந்து விட்டார். அவருக்கு அதிர்ஷ்டம் அடித்துவிட்டது என்று. உலகிலே இதுவரை அப்படியொன்றும் நிகழ்ந்ததேயில்லை.
விதை முளையாகி செடியாகித்தான் இறுதியில் மரமாகிறது. முளையிலேயே கவனிக்காமல் அசிரத்தையாக இருந்துவிட்டு, திடீரென மரம் தானே தோன்றி விடும் என்று நினைப்பது அறிவீனம் அல்லவா!
ஆரம்பம் ஒன்று இல்லையெனில் அங்கு செயல்கள் முளைப்பதேயில்லை. இவ்வுலகில் ஒருவன் ஒரு செயலை / அதைச் செய்ய வேண்டிய முறைப்படி செய்தால் அதன் நற்பலனை, அவன் அடைந்தே தீர வேண்டும் என்பதே இயற்கையின் இன்பம்தரும் கட்டளை!
மனத்தின் தன்மையாகிய நம்பிக்கையும், புத்தியின் தன்மையாகிய திடமனதும், தற்காலத்தில் குறைந்து வருகின்றன. சந்தேகமும், வீண் கவலைகளும் மனிதன் மனதில் தோன்றி, அவனது முன்னேற்றத்தையே அழித்து விடுகின்றன.
வெற்றி தோல்விகளை தரும் சக்திகள் அவைகளின் போக்கில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. விருப்பு வெறுப்புகளோ, நல்லோர் தீயோர் முதலிய பாகுபாடுகளோ இன்றி அவை இயங்குவதாலேயேதான் சில தீய மனிதர்களும் அதிர்ஷ்டசாலிகளாக வாழ்வதைக் காண்கிறோம்.
வாழ்க்கையில் வெற்றி பெறுவது என்பது சில இயற்கை விதிகளையே நம்பி உள்ளது! அதில் ஒரு முக்கியமான விதி(Rule) என்னவென்றால் இன்றைய தினத்தில் நீ முழுவதுமாக வாழ்ந்துவிடு... வருங்காலம் தானே வளமாக உருவாகிவிடும் என்பதுதான்.
இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று மூன்று காலங்கள் இருப்பதாக எண்ணுகிறோம். இறந்த காலம் என்பது முன்பே சென்று விட்டதாகவும், நிகழ்காலம் என்பது தற்சமயம் நடந்து கொண்டிருக்கிறது என்றும், எதிர்காலம் என்பது இனிமேல்தான் வரப்போகிறது என்று நாம் நினைக்கிறோம்.
இம்மூன்று காலங்களும் கற்பனையில்தான் இருக்கின்றவேயன்றி உண்மையில் ஒரே நிகழ்காலம்தான் உலகில் இருக்கிறது.!
நாம் பள்ளியில் படித்திருக்கிறோம். முதலில் இறந்த காலம், அதன்பிறகு நிகழ்காலம், இறுதியில் எதிர்காலம் என்று வருகிறது என்று!
நாம் தினமும் சந்திப்பது நிகழ்காலத்தைத்தான்.. நேற்றைய நிகழ்காலமே இறந்த காலம்.. இன்றைய நிகழ்காலமே உண்மையான நிகழ்காலம். நாளை நாம் அனுபவிக்கப் போகும் நிகழ்காலமே வருங்காலம் என்பதாகும்.
எனவே "நிகழ்காலத்தை" (To day) நல்லபடியாக முழுமையாகப் பயன்படுத்துங்கள்.. அது பிற்கால வாழ்க்கையில் உங்களுக்கு பல அன்பளிப்புக்களை (presents) வாரி வழங்கும்.. இதனாலாயே இன்று, இப்போது செய்யும் செயல்களுக்கு Present Tense ஆங்கிலத்தில் சொல்கிறோம்..
இந்த நிகழ்காலத்தை நன்கு பயன்படுத்தவில்லையென்றால், உங்களை துன்பத்தில் (Past என்பதற்கு மரணம் என்றொரு பொருள் உண்டு என்பதை நீங்களும் அறிவீர்கள்) ஆழ்த்திவிடும். இதனாலேயே நேற்றைய நிகழ்காலத்தை இறந்தகாலம் என்று சொல்கிறோம்!
கடந்த காலத்தை நாம் கடந்து வந்துவிட்டோம். ஆனால் மனதளவில் நாம் அதை மீண்டும் மீண்டும் அசைபோட்டுக் கொண்டே இருக்கிறோம். கடந்தகால கசப்புகளை நெஞ்சில் சுமந்துகொண்டு கஷ்டப்படுகிறோம்.
அந்த கடந்தகாலத்தில் நடந்ததை வைத்துக்கொண்டு இன்றைய நிகழ்காலத்தை எடைபோடுகிறோம். நிகழ்காலத்தையும் அதனால் வீணாக்கி விடுகிறோம். பின்பு எதிர்காலமாகிய நிகழ்காலத்திலும் அதே பழைய வேதனைகளைத்தான் சுமந்து கொண்டு செல்லப்போகிறோம்!
எனவே நிகழ்காலம், எதிர் காலம் என்ற இரண்டையுமே நாம் உபயோகிக்காமல் நமது கடந்த கால கவலைகளினால் அலட்சியப்படுத்திவிடுகிறோம். பின்பு வெற்றியானது எப்படி நம்மைத் தேடி வரும்?
ஒரு சிறிய கதையைப் பார்ப்போம்..
ஒரு கிராமத்தில் ஒரு பெரியவர் இருந்தார். அவர் மிகவும் நல்லவர்.. வல்லவர் (அதாவது என்னைப் போல என்று வைத்துக்கொள்ளுங்களேன்...!!!???). யாருக்குமே தலைவணங்காத பெரியவர்.. முடிதிருத்துபவரிடம் மட்டுமே தலைகுனிபவர.
அன்று ஒருநாள் வழக்கம்போல, பெரியவரின் முடியைத் திருத்தியபடியே, முடிதிருத்துபவர் பேச்சுக் கொடுக்கிறார்.
"உங்கள் வயற்காட்டில் அறுவடைக்காகக் காத்திருந்த நெற்பயிர்களுக்குத் தண்ணீர் பாயவிடாமல் உங்களது பக்கத்து நிலக்காரன் தடுத்துவிட்டானாமே! அதனால் உங்களின் இந்த போகப் பயிர்களெல்லாம் வீணாகிவிட்டதாமே" என்று பேச்சை ஆரம்பித்தார்.
"அதைப் பற்றி இப்போது எனக்கு ஞாபகப்படுத்தாதே" என்று கண், காதுகள் புடைக்க அவர் கோபத்தோடு சொல்கிறார்.
"சரி .. அதை விடுங்கள்.. இரண்டு வருடங்களுக்கு முன்பு உங்களை விட்டு ஓடிப்போன மகளைப் பற்றி ஏதாவது தகவல் வந்ததா? " என்று மறுபடியும் முடிதிருத்துபவர் கேட்டார்.
"எதைப்ப பற்றியும் இப்போது பேசாதே! வாயை மூடிக்கொண்டு உன் வேலையை மட்டும் பார்" என்று பெரியவருக்கு கோபம் மீண்டும் வந்து விடுகிறது!
கடைசியில் சுத்தமாக முடிவெட்டிக் கொண்டு ஊர் பெரியவர் எழுந்த போது, அந்த முடிதிருத்தும் தொழிலாளி அவரிடம் சொல்கிறார்.
"ஐயா! நான் அதிகப் பிரசங்கித்தனமாக பேசியதற்கு நீங்கள் மன்னிக்க வேண்டும்.. நான் உங்கள் கடந்த காலத்தில் (Past) நடந்த விஷயங்களைப் பற்றி பேசியபொழுதெல்லாம் உங்கள் உடம்பிலிருந்து .. அத்துணை முடிகளும் (தலை உட்பட ) கோபத்தால் சிலிர்த்துக் கொண்டன. எனவே அது முடிதிருத்துவதற்கு மிகவும் வசதியாக இருந்தது. உங்களுக்கு அழகாக முடிவெட்ட வேண்டும் என்று கருதியே இவ்வாறு உங்களுக்கு கோபம் வருவது மாதிரி பேச்சுக்கொடுத்தேன்... நான் செய்தது தவறதுதான் .. என்னை மன்னித்து விடுங்கள் ஐயா!" என்றார்.
ஆக.. கடந்த காலத்தில் நாம் அடைந்த கஷ்டங்கள், வேதனைகள் இதையெல்லாம் நினைத்தால் ஒன்று, கோபத்தில் இரத்தம் கொதிக்கிறது! துயரத்தில் மனது ரணகளமாகி விடுகிறது! நமது உடலே உணர்ச்சி வசப்பட்டு விடுகிறது. பின்பு தெளிவும் திறமையும் எப்படி கிடைக்கும்!!??
கடந்த காலத்தை நினைத்து, நிகழ்காலத்தைப் பார்த்து பயப்படுகிறோம். மனம் கனத்துப் போகிறது! வருங்காலத்தைப் பற்றிய அநாவசியமான பயங்களும் சூன்யங்களுமே தெரிகின்றன.
எனவே உங்களது எதிர்கால வாழ்க்கை வெற்றிப் பாதையில் செல்ல வேண்டுமானால், கடந்த காலத்தைப் பற்றியும் எதிர்காலத்தைப் பற்றியும் அலட்சிக் கொள்ளாமல் இருப்பதுதான் ஒரே வழி!
You live fo to-day only!
Forgot the past
Don't think (negetively) about future.
No comments:
Post a Comment